| ADDED : ஜூன் 06, 2024 05:32 AM
தேவிபட்டினம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் கடலோர பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.கிழக்கு கடற்கரை சாலை தேவிபட்டினம், சம்பை, கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, வாலிநோக்கம், நதிப்பாலம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் தரப்பு அயோடின் கலக்கப்பட்டு உணவு பொருள் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு கருவாடு தோல் பதனிடுதல் உள்ளிட்ட தேவைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் உப்பள பாத்திகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் உப்பு உற்பத்திக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை இல்லாமல் வெயிலின்றி உள்ளதாலும் உப்பு உற்பத்தி செய்வதில் தொழிலாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் பாத்திகளில் உள்ள தண்ணீர் உப்பாக மாறுவதற்கு வழக்கத்தை விட கூடுதல் நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உப்பளத் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.