| ADDED : ஜூலை 03, 2024 02:11 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.ராமநாதபுரம் மாவட்ட வைகை கரையோரம் அழகன்குளத்தில் 8 கட்டங்களாக அகழாய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் எடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் இன்று வரை காட்சிப்படுத்தப்படவில்லை. பாண்டியரின் துறைமுகமாக இருந்த மருங்கூர்பட்டினம் தான் தற்போது அழகன்குளம் என அழைக்கப்படுகிறது. இங்கு முதற்கட்டமாக 1986--87ல் அரசுப்பள்ளி அருகே கோட்டைமேடு பகுதியில் அகழாய்வுப்பணி நடந்தது. அதன் பிறகு 8 கட்டங்களாக அகழாய்வுப்பணிகள் தொடர்ந்து நடந்தன. எட்டாம் கட்டமாக 2016--17 ஆண்டில் அகழாய்வு நடந்ததில் 13 ஆயிரம் வகையான பழங்காலப்பொருட்கள் கண்டறியப்பட்டன.இதில் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், பாண்டியர் கால, கிரேக்கத்தை சேர்ந்த வேலன்டைன் மன்னர்கள் காலத்து காசுகள், மதுக்குடுவைகள், தானிய சேமிப்பு கலன்கள், பாசி மணிகள் என பல்வேறு வகை பொருட்கள் கிடைத்துள்ளன. இப்பொருட்களை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த பாண்டியராஜன் அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார். அதற்கு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த பொருட்களை கார்பன் சி 14 முறையில் ஆய்வு செய்ததில் 2360 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியதற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டன.அழகன்குளத்திற்கு பிறகு கண்டறியப்பட்ட கீழடி அகழாய்வு தளத்தில் இன்று அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அழகன்குளத்தில் எட்டு கட்ட அகழாய்வு முடிந்து 7 ஆண்டுகள் ஆகியும் அகழாய்வு குறித்த அறிக்கை வெளியிடப்படவில்லை.இதற்கிடையில் அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசும் அறிவித்துள்ளார். ஆனால் முறையான நிதி ஒதுக்கீடு இன்றி அருங்காட்சியகப்பணிகள் துவங்கப்போவதில்லை. எனவே அருங்காட்சியகம் அமைக்க உரிய நிதி ஒதுக்க வேண்டும் என ராமநாதபுரம் தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.அழகன்குளம் பகுதி துறைமுகமாக விளங்கியதால் கடலில் தொல்லியல் ஆய்வு நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கடல் பகுதியில் ஆராய்ச்சியை துவங்கவும், அழகன்குளத்தில் அருங்காட்சியகப்பணிகளை துவக்கவும் அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.