| ADDED : ஜூலை 31, 2024 04:56 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே உலையூர் கிராமத்தில் கண்மாயில் அமைக்கப்பட்டுள்ள மடை, வரத்து கால்வாய் துார்ந்து போனதால் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.உலையூர் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கண்மாயில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தாவு மடை, வரத்து கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்தனர்.காலப்போக்கில் மடை, வரத்து கால்வாய் மராமத்து பணி செய்யப்படாததால் துார்ந்து போனது. இதன் இவ்வழியே விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:உலையூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயத்திற்கு கண்மாய் தண்ணீரை பாய்ச்சினர். விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக இருந்தது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மடை, வரத்து கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை.இதனால் வரத்துக்கால்வாய் மணல் மேடாகி இருந்த இடம் தெரியாமல் மறைந்துள்ளது. கூடுதல் பணம் செலவு செய்து மோட்டார் வைத்து கண்மாயில் தேங்கும் தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர். விவசாயிகள் சிரமப்படுகின்றனர். விவசாயிகள் நலன் கருதி மடை, வரத்து கால்வாய் மராமத்து பணி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.