| ADDED : ஜூன் 20, 2024 04:36 AM
திருவாடானை: திருவாடானை பஸ்ஸ்டாண்ட் கழிப்பறையில் கதவுகள் இல்லாததால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.திருவாடானை பஸ்ஸ்டாண்டில் திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், கொடைக்கானல், கரூர், கோவை போன்ற பல்வேறு நகரங்களில் இருந்து வரும் பஸ்கள் பஸ்ஸ்டாண்டிற்குள் வந்து செல்கின்றன. இங்கு கட்டண கழிப்பறை சுத்தம் இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது.தொலை துாரங்களிலிருந்து வருவோர் இயற்கை உபாதை கழித்துவிட்டு பயணத்தை தொடரலாம் என கட்டணத்தை கொடுத்துவிட்டு கழிப்பறைக்குள் சென்றால் கதவுகளே இல்லாமல் உள்ளது. இதை பார்த்ததும் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். பயணிகள் கூறியதாவது:இங்குள்ள ஐந்து கழிப்பறைகளில் கதவுகளே இல்லை. ஆண்கள், பெண்கள் கழிப்பறை அனைத்தும் இதே போல் தான் உள்ளது. உள்ளே நுழையும் போதே துர்நாற்றம் வீசுகிறது. கழிப்பறை பிளேட்டுகள் உடைந்துள்ளது. குழாயில் தண்ணீர் வருவதில்லை. வெளியில் உள்ள தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்துச் சென்று பயன்படுத்த வேண்டியுள்ளது. மிகவும் அசுத்தமாக இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த கழிப்பறை அருகே புதிய கழிப்பறை கட்டுமானப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த கழிப்பறை கட்டடம் முதல் கட்ட பணியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. கைக் குழந்தையுடன் செல்லும் பெண் பயணிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.