| ADDED : மே 28, 2024 05:31 AM
கீழக்கரை, : கோடை மழையால் மன்னார் வளைகுடா தீவுகளில் கருகும் நிலையில் இருந்த செடிகள், மரங்கள் புத்துயிர் பெற்றுள்ளன.மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் உள்ளன. அவற்றில் பூமரிச்சான்பட்டி தீவு மட்டும் கடல் நீரில் மூழ்கியுள்ளது. இவற்றில் கீழக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட வாலிமுனை தீவு, அப்பாத்தீவு, தலையாரித்தீவு, வாளைத்தீவு, முள்ளித்தீவு உள்ளிட்ட தீவுகளில் சமீபத்தில் பெய்த கோடை மழையால் கருகும் நிலையில் இருந்த செடிகள், மரங்கள் வளர்ந்து வருகின்றன.இயல்பாக நிலங்களைக் காட்டிலும் தீவுகளில் அதிக வெப்பமும் மித மிஞ்சிய குளிரும், உப்பு காற்றின் சாரலும் வெகுவாக இருக்கும். இதனை தாங்கி வளரக்கூடிய அரிய வகை மரங்கள் தீவுகளில் ஏராளமாக வளர்ந்துள்ளன. மன்னார் வளைகுடா வனச்சரகத்தின் சார்பில் கடந்த ஆண்டு ஏராளமான பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. ஏப்., மற்றும் மே முதல் வாரத்தில் கடுமையான வெப்பத்தின் காரணமாக அங்குள்ள செடி, கொடிகள், மரங்கள் பாதிப்பை சந்தித்தன. கருகும் நேரத்தில் கோடை மழையால் தீவுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தீவுகளில் அதிக வெப்பம், உப்புக்காற்று, மழைப்பொழிவு இவற்றை தாங்கி வளரக்கூடிய கீரிச்செடி, பூவரசு, சவுக்கு, பனைமரம், உடைமரம், கற்றாழைச் செடிகள் மற்றும் அரிய வகை கொடி இனங்களும் உள்ளன. மாங்குரோவ் காடுகளும் உள்ளது.தீவுகளில் விஷத் தன்மை கொண்ட கட்டுவிரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்ட பாம்புகளும், எலி, கீரிப்பிள்ளை உள்ளிட்டவைகளும் தங்களது வாழ்விடமாக கொண்டுள்ளன. தீவுகளைச் சுற்றிலும் இயற்கை அரணாக பவளப்பாறைகள் நிறைந்து காணப்படுகிறது. தற்போதைய கோடை மழையால் பூத்துக் குலுங்கும் வகையில் உள்ளன என்றனர்.