| ADDED : ஜூன் 20, 2024 04:25 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு பஸ் டிப்போவில் உண்ணாவிரத பொது விளக்க கூட்டம் நடந்தது. முதுகுளத்துார் சி.ஐ.டி.யு., கிளை தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். தமிழகம் முழுவதும் ஜூன் 24ல் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரதம் குறித்து விளக்கி பேசினார். சி.ஐ.டி.யு., காரைக்குடி மண்டல தலைவர் ராஜன் கூறியதாவது:தமிழ்நாட்டில் 35 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இலவச பயணம் செய்துள்ளனர். இந்திய அளவில் கல்வித் தரத்தில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பதற்கு போக்குவரத்து கழகமும் ஒரு முக்கிய காரணம். தற்போது ஆட்சியில் 60 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் அரசு பஸ்சில் இலவச பயணம் செய்வதால் பெண்களின் வருவாய் முழுமையாக குடும்ப செலவிற்கு உதவியாக இருக்கிறது. அரசு பஸ் போக்குவரத்து சேவை நோக்கத்தில் செயல்படுவதால் நஷ்டத்தை மனதில் வைத்து இயக்கச் செலவிற்கும், வரவுக்கும் இடையே உள்ள நிதி வேறுபாட்டை அரசு வழங்க வேண்டும். 2015ம் ஆண்டு முதல் பணி காலத்தில் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு வழங்கக்கூடிய கருணை பணி நியமனம் வழங்குவதில் தாமதம் செய்கின்றனர். குறைந்த எண்ணிக்கையில் வாரிசு வேலை வழங்குவதிலும், தகுதிக்கேற்ற பணி வழங்காமல் டிரைவர், கண்டக்டர் பணி மட்டுமே வழங்குவது முறையற்றது. இந்த போக்கை அரசு கைவிட வேண்டும் என்றார். மண்டல பொதுச்செயலாளர் தெய்வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் முருகன், கிளைச் செயலாளர் திருமலை தீனதயாளன், பொருளாளர் மாரீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.