| ADDED : மே 29, 2024 05:34 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் போலீசாரும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம், அதை சுற்றியுள்ள நுாற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் நடக்கும் குற்ற சம்பவங்கள், திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் தீர்வு காணப்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும்புகார் தரவும், விழாக்களுக்கு அனுமதி கேட்டும், தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்தபோலீஸ் ஸ்டேஷன் கட்டடம் பெரும்பாலான பகுதிகளில்சேதமடைந்து சிமென்ட் சிலாப்புகள் பெயர்ந்து விழுகின்றன.குறிப்பாக கட்டடத்தின் கூரை பகுதியில் உள்ள சிமென்ட் பூச்சுகள் அவ்வப்போது பெயர்ந்து விழுவதால் போலீசாரும், மனு அளிக்க வரும் பொதுமக்களும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். 2018ல் ஸ்டேஷன் திறக்கப்பட்ட நிலையில் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கட்டட உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என மக்கள் கூறினர்.