| ADDED : ஜூலை 21, 2024 04:44 AM
ராமநாதபுரம்; -தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக முதல்வரிடம் முதலில் குரல் கொடுத்தது காங்., என்று மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். ராமநாதபுரத்தில் காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. காங்., ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா வரவேற்றார்.முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், கருமாணிக்கம் எம்.எல்.ஏ., அகில இந்திய காங் மீனவர் பிரிவு தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஏ.திருமுருகன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாநில தலைவர் செல்வபெருந்தகை பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி) தலைவர்பணிக்கு வந்து ஒராண்டு கூட நிறைவடையாத நிலையில் ராஜினாமா செய்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஊழல் நடந்துள்ளது. மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் முஸ்லிம்கள் இந்தியாவில் எப்படி வாழலாம் என கூறியிருப்பதை காங்., வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் தொடர் கொலைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும். மின் கட்டண உயர்வுக்கு முதலில் குரல் கொடுத்தது காங்.,தான். காவிரி பிரச்னை அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வரிடம் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரிக்கை விடுத்துள்ளோம். மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.