| ADDED : மே 24, 2024 02:26 AM
கீழக்கரை: -பள்ளி மாணவர்களை குறி வைத்து விற்கப்படும் தின்பண்டங்களால் பாதிப்பை சந்திக்கும் போக்கு பல இடங்களில் அரங்கேறி வருகிறது.கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் ரூ.1 முதல் ரூ.5 விலைகளில் விற்கப்படும் பாக்கெட்டுகளில் ரசாயன கலப்புள்ள தின்பண்டங்களை அதிகளவு விற்பனை செய்கின்றனர்.உடலுக்கு கேடு விளைவிக்கும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத தின்பண்டங்களை பள்ளி மாணவர்களுக்காக அதிக அளவு விற்பனை செய்கின்றனர். பள்ளி திறந்தவுடன் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் அவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர்.பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்கு அல்சர், ஒவ்வாமை, தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளை சந்திக்கின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மாணவர்களுக்கு பெற்றோர் பழங்கள் மற்றும் இயற்கை ஜூஸ்களை கொடுக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர் அவற்றை செய்வதில்லை. மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை சாப்பிடுவதால் வயிற்று கோளாறு ஏற்படுகிறது.இவற்றை கண்டுகொள்ள வேண்டிய உணவு பாதுகாப்பு மற்றும் கலப்பட தடுப்பு துறையினர் எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் மவுனம் சாதிக்கின்றனர். எனவே கிராமங்களில் அதிக அளவு குறைந்த விலையில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் செயற்கை உணவு பண்டங்களால் பல்வேறு இன்னல்களை பெற்றோர் சந்திக்கின்றனர். எனவே பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல் நல கேடு விளைவிக்கும் தின்பண்டங்களை கட்டுப்படுத்தி வரைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.