உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  திருவாடானை தாலுகாவில் 300 கண்மாய்கள் நிரம்பின   கட்டமைப்பு இன்றி உடையும் அபாயம்

 திருவாடானை தாலுகாவில் 300 கண்மாய்கள் நிரம்பின   கட்டமைப்பு இன்றி உடையும் அபாயம்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் தொடர் மழையால் 300க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பின. போதிய கட்டமைப்பு இல்லாததால் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் 89 பொதுப்பணித்துறை கண்மாய்களும், 250 ஊராட்சி ஒன்றிய கண்மாய்களும், 500க்கும் மேற்பட்ட ஊருணிகளும் உள்ளன. இத்தாலுகாவில் ஆண்டு தோறும் 26,650 எக்டேரில் நெல் சாகுபடி பணிகள் நடக்கிறது. இத்தாலுகாவை பொறுத்தவரை ஆண்டு தோறும் மழை பொழிவு குறைவாக தான் இருக்கும். கடந்த நான்கு ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தால் பருவமழை அதிகமாக பெய்ததால் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பியது. இந்த ஆண்டு பருவமழை தக்க நேரத்தில் துவங்கியது. விவசாயிகள் ஆவலுடன் மழையை எதிர்பார்த்து இருந்தனர். அதன்படி மழை பெய்யத் துவங்கியது. இதில் தற்போது 300க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி கலுங்கு வழியாக நீர் வெளியேறுகிறது. இனி வரும் காலங்களில் கனமழை பெய்யும் பட்சத்தில் கண்மாய்கள் உடையும் அபாயம் ஏற்படும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் நிலைகளில் கட்டமைப்புகளை பராமரிப்பு செய்ய வேண்டும். விவசாயிகள் கூறியதாவது: அந்த காலத்தில் கிராமப் பகுதிகளில் உள்ள ஆறுகள், கண்மாய்கள், குளங்கள், ஊருணிகள், தெப்பக்குளங்கள் ஆகியவற்றிக்கு நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு நீர் நிலையும் நிறைந்து மற்றவைகளுக்கு செல்லும் வகையில் கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். உபரி நீர் கடலுக்கும் செல்லும் வகையில் அமைப்பு இருந்தது. கோடை காலங்களில் இவற்றை முறையாக துார்வாரி கால்வாய்களை பராமரித்து வந்ததால் பலத்த மழை பெய்தால் கூட சமாளிக்கும் வகையில் இருந்தது. ஆனால் இன்றைக்கு நீர் நிலைகளை பராமரிக்க தவறியதால் கால்வாய், கண்மாய், ஊருணிகள் அருகில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி விட்டதால் மழை பெய்யும் போது சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இனி வரும் காலங்களில் பருவநிலை மாற்றங்களுக்கு தகுந்தவாறு அரசு விழிப்புடன் நீர் நிலைகளை புதுப்பிக்க வேண்டும். விவசாயத்தை பாதுகாக்க புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை