| ADDED : பிப் 22, 2024 03:03 AM
முதுகுளத்துார்:-கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தடா கோயில் அருகே டூவீலரில் வந்த மதுரை ரவுடி ராமர் பாண்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் ராமர் பாண்டி 33. இவர் மீது 7 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.2012 அக்.30ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்திக்கு சென்று விட்டு திரும்பியவர்கள் மீது மதுரை சிந்தாமணி செக்போஸ்ட் அருகே பெட்ரோல் குண்டு வீசியதில் புளியங்குளத்தை சேர்ந்த ஜெயபாண்டி, சுந்தரபாண்டியன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தில் ராமர் பாண்டி, மோகன், கார்த்திக் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கு கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது.இந்த வழக்கில் பிப்.19ல் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு டூவீலரில் நண்பர் கார்த்திக்குடன் திரும்பி வந்த போது அரவக்குறிச்சி தடா கோயில் அருகே காரில் வந்த கும்பல் வழிமறித்து ராமர் பாண்டியின் தலையை கொடூரமாக சிதைத்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். கார்த்திக் காயத்துடன் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை கருப்பாயூரணி சேதுராமன் மகன் வினோத் கண்ணன் 26, கீரனுார் வீரணன் மகன் மகேஷ்குமார் 24, மேலுார் ராமஜெயம் மகன் தனுஷ் 21, ஆண்டாள் கொட்டாரம் முருகேசன் மகன் தர்மா 25, முருகன் மகன் ரமேஷ் 23, ஆகியோர் முதுகுளத்துார் குற்றவியல் நடுவர் அருண்சங்கர் முன்னிலையில் சரண் அடைந்தனர்.அவர்களை 5 நாள் விருதுநகர் சிறையில் நடுவர் அடைக்க உத்தரவிட்டார். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 5 பேரும் விருதுநகர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.