| ADDED : பிப் 16, 2024 04:54 AM
கடலாடி: கடலாடி ஒன்றியத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள்,நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பிப்., முதல் வாரங்களில் கடந்த பத்து நாட்களாக ஆண்டு விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் அளவிற்கு கவர்ந்துள்ளது. பெற்றோர் கூறியதாவது:பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு பங்களிப்புடன் தற்போது அரசுப் பள்ளிகள் முழு கண்காணிப்புடன் இயங்குகிறது. மாணவர்களின் தனித்திறன், விளையாட்டு திறன், நடனம், நாட்டியம் உள்ளிட்ட கலையம்சங்களை வெளியே கொண்டுவருவதற்கு இது போன்ற ஆண்டு விழா பயன்படுகின்றது.ஆண்டு விழாவிற்கென பிரத்தியேகமான வண்ண உடைகள் மற்றும் அதற்குரிய சிகை, ஒப்பனை அலங்காரங்களை முன்னெடுப்பதில் ஏராளமான பெற்றோர் மெனக்கெடுக்கின்றனர். இதனால் ஆசிரியர் பெற்றோரிடையே நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது.மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர்வதற்கும் தனிநபர்கள் நன்கொடை உள்ளிட்டவைகள் பயன்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அதிக பொருள் செலவில் சமீப காலமாக அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் சிறப்பான முறையில் கடலாடி வட்டார பகுதிகளில் கொண்டாடப்படுகிறது என்றனர்.