| ADDED : ஜன 24, 2024 05:02 AM
திருவாடானை : கடலோர காவல்படை தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொண்டி கடலோர காவல் குழும போலீசார் கூறியதாவது:இந்திய கடலோர காவல்படை மற்றும் கப்பற்படையில் நவிக் மற்றும் மாலுமி ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகளில் பங்கேற்க பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.பி.பட்டினம், தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் வாரிசுகள் இந்த பணிகளில் சேரும் வகையில் அவர்களுக்கு தேவையான சிறப்பு பயிற்சிகளை அளிக்க கடலோர பாதுகாப்பு குழுமம் முடிவு செய்துள்ளது.அதன்படி மீனவர்களின் வாரிசுகள் பிப்.8க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது, எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கு பதில் அளிப்பது மற்றும் துறை ரீதியான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்வோருக்கு உணவு, இருப்பிடம் ஆகியவற்றுடன் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும். எனவே கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற விபரங்களுக்கு தொண்டி, தேவிபட்டினம் கடலோர காவல் குழுமம் மற்றும் மீன்வளத்துறையினரை அணுகலாம். பயிற்சி அளிக்கப்படும் இடம், நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றனர்.