பிச்சை மூப்பன்வலசையில் 4 மாதங்களுக்கு பிறகு படகு போக்குவரத்து துவங்கியது: சுற்றுலா பயணிகள் ஆர்வம்
கீழக்கரை: மன்னார் வளைகுடா பிச்சைமூப்பன் வலசை சூழல் சுற்றுலா மையத்தில் நான்கு மாதங்களுக்கு பின் படகு சவாரி துவங்கியதால் சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் சவாரி செய்தனர். ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏர்வாடி வழியாக 3 கி.மீ.,ல் உள்ள பிச்சை மூப்பன்வலசைக்கு வருகின்றனர். மன்னார் வளைகுடா உயிர் கோள காப்பகம் சார்பில் 2020ம் ஆண்டு சூழலியல் சுற்றுலா தளம் துவக்கப்பட்டது. படகு குழாமில் இருந்து மணல் திட்டுக்கு கண்ணாடி இழையிலான படகு மூலமாக அழைத்துச் செல் கின்றனர். ஒரு நபருக்கு ரூ.200 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மணல் திட்டு சென்று வருவதற்கு 50 நிமிடங்கள் ஆகிறது. லைப் ஜாக்கெட் அணிந்த நிலையில் 12 நபர்கள் மட்டுமே அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்குள்ள வழிகாட்டி மூலம் விளக்கப்படுகிறது. கண்ணாடியிழை படகு மூலமாக அரிய வகை பவளப்பாறைகள், மீன் இனங்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக கண்டு ரசிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் ஜூன் மாதம் முதல் தொடர்ச்சி யாக காற்றின் வேகம் மற்றும் அலைகளின் தாக்கத்தால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியதால் கடந்த வாரம் முதல் மணல் திட்டுக்கு வழக்கம் போல் இரண்டு படகுகளில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து திரும்புகின்றனர்.