உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  எஸ்.ஐ.ஆர்., படிவங்களை எடுத்துக்கொண்டு மிரட்டல்: தி.மு.க., நிர்வாகி மீது புகார்

 எஸ்.ஐ.ஆர்., படிவங்களை எடுத்துக்கொண்டு மிரட்டல்: தி.மு.க., நிர்வாகி மீது புகார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மனோகரன் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) படிவங்களை எடுத்து கொண்டு பணி செய்ய விடாமல் தடுப்பதாக காடமங்கலம் வி.ஏ.ஓ., யூனுஸ் கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோனிடம் புகார் அளித்துள்ளார். யூனுஸ் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: நவ., 15 இரவு காடமங்கலத்தைச் சேர்ந்த மனோகரன் அனில்கபூர் என்பவருக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி செய்திருப்பதாக கூறி அடங்கல் கேட்டு சிரமங்களை கொடுத்தார். தொடர்ந்து கிராமத்தில் வேலை செய்ய முடியாது; சஸ்பெண்ட் செய்து விடுவேன் எனவும் மிரட்டினார். தற்போது தேர்தல் கமிஷனின் எஸ்.ஐ.ஆர்., பணிக்காக பூத் லெவல் ஆபிஸராக காடமங்கலத்தில் பணிபுரிகிறேன். மனோகரன், வாக்காளர்கள் படிவங்களை எடுத்து மறைத்து வைத்து விட்டார். 50 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளதாக அடங்கல் கொடுத்தால் படிவங்களை திரும்ப தருவேன். அப்படி தரவில்லை என்றால் வி.ஏ.ஓ., பதவியை காலி செய்து விடுவேன் என தொடர்ச்சியாக அரசு பணிகளை செய்ய விடாமல் தடுத்துள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் மனோகரன் கூறுகையில், ''வி.ஏ.ஒ., தவறான தகவல்களை தந்துள்ளார். அவரை மிரட்டவில்லை. அவரிடம் எந்த அடங்கலும் கேட்கவில்லை. எனது குடும்பத்தினர் எஸ்.ஐ.ஆர்., படிவங்களை மட்டுமே பெற்றுள்ளேன். அவர் சரியாக வேலை செய்வது இல்லை. இதுகுறித்து கமுதி தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்