| ADDED : ஜன 24, 2024 01:52 AM
கமுதி:வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்கள் முருகன், திலகவதி ஆகியோருக்கு பிடிவாரன்ட்பிறப்பித்து கமுதி நீதிபதி சங்கீதா உத்தரவிட்டார்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி போலீஸ் ஸ்டேஷனில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்பெக்டராக முருகன், எஸ். ஐ., திலகவதி பணிபுரிந்தனர். அப்போது நடந்த கொலை வழக்கு ஒன்றில் முஷ்டகுறிச்சி ஆறுமுகம் சேர்க்கப்பட்டார்.கொலை வழக்கில் தன்னை இணைத்த இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., மீது கமுதி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆறுமுகம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் இருந்து தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இருவரும் ஆஜராகவில்லை.இதையடுத்து இருவருக்கும் நேற்று பிடிவாரன்ட்பிறப்பித்து நீதிபதி சங்கீதா உத்தரவிட்டார்.தற்போது திலகவதி மதுரை தல்லாகுளம் இன்ஸ்பெக்டராகவும், முருகன் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் இன்ஸ்பெக்டராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.