பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மீது அதிருப்தி
பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் செவிலியர்கள் மீது நோயாளிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். பெரியபட்டினம் ஊராட்சியில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். களிமண்குண்டு, வண்ணாங்குண்டு, பெரியபட்டினம், கிருஷ்ணாபுரம், முத்துப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் பெரியபட்டினம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். 24 மணி நேரமும் இயங்கும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போதுமான டாக்டர்கள் இல்லை. 5 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில் டாக்டர் வருவதில்லை. நோயாளிகள் கூறியதாவது: இரவு நேரத்தில் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் நலக்குறைபாடுகளை அவசர காலத்தை கணக்கிட்டு மருத்துவம் செய்வதற்காக வந்தால் செவிலியர்கள் ஏன் இந்த நேரத்தில் வருகிறீர்கள் என எரிச்சலுடன் கேட்கின்றனர். நோய் வருவதற்கு காலம் நேரம் இல்லை. இங்குள்ள செவிலியர்கள் மெத்தனப் போக்குடன் அலட்சியமாகவும் நோயாளிகளிடம் எரிந்து விழுகின்றனர். யாரும் கனிவாக கூட பேசுவதில்லை. யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளுங்கள் எனக் கூறுகின்றனர். இதனால் பெரும்பாலான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெறுவதற்கு பதிலாக ராமநாதபுரம், கீழக்கரை உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு சென்று விடுகின்றனர். எனவே திருப்புல்லாணி வட்டார மருத்துவ அலுவலர் செவிலியர்களுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்றனர்.