ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட ரயில் பாலம் பிப்.24ல் 110 வயதைக் கடந்து பிரியா விடை பெற உள்ளது. முழு வீச்சில் நடக்கும் புதிய பாலத்தை விரைவில் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ஆங்கிலேயர் ஆட்சியில் 2054 மீ., நீளத்தில் 146 துாண்களுடன் ரயில் பாலம் அமைத்து 1914 பிப்., 24ல் போக்குவரத்தை துவக்கினர். இந்தியாவில் கடல் மீது அமைந்துள்ள நீளமான ஒரே ரயில் பாலம் இதுதான்.இப்பாலத்தை கடந்து தான் சென்னை, நாகை, கன்னியாகுமரி மற்றும் கேரளா, குஜராத், கோல்கட்டா துறைமுகங்களுக்கு கப்பல், மீன்பிடி படகுகள் செல்ல முடியும். இதற்காக பாலத்தின் நடுவில் ஜெர்மனி நாட்டு பொறியாளர் ஜெர்சர் முயற்சியில் 228 டன்னில் 81 டிகிரி அளவில் திறந்து மூடும் வகையில் துாக்கு பாலம் வடிவமைத்து பாலத்தின் நடுவில் பொருத்தப்பட்டது இந்த பாலத்தின் சிறப்பு அம்சம். புயல், கப்பலால் சேதம்
1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயல் பாலத்தை புரட்டி போட்டதில் 124 துாண்கள் சேதமடைந்தன. தொழில் நுட்பம் வளர்ச்சி இல்லாத அக்காலக் கட்டத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் புகழ்பெற்ற பொறியாளர் ஸ்ரீதர் தலைமையில் தொழிலாளர்கள் 67 நாட்களில் புதுப்பித்து மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்கினர்.2014 ஜன.13ல் பாம்பன் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படை கப்பல் சூறாவளிக் காற்றினால் பாலத்தின் 121வது துாண் மீது மோதி சேதப்படுத்தியது. இதனை 7 நாட்களுக்கு பின் சீரமைத்து மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்கினர். பலமிழந்தது பாலம்
இருப்பினும் பாலம் வலுவிழந்தது. 2019 டிச.,3ல் துாக்கு பால இரும்புத் துாணில் விரிசல் ஏற்பட்டதுடன் சில துாண்கள் பலமிழந்தது தெரியவந்தது.இதனால் ரயில் போக்குவரத்தை நிறுத்தி துாக்கு பாலத்தை சரி செய்து 85 நாட்களுக்குப் பின் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். 2022 நவ.23ல் மீண்டும் துாக்கு பாலத்தின் துாண்கள் பலமிழந்தன.இதையடுத்து ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பஸ்கள், தனியார் வாகனங்களில் பக்தர்கள் ராமேஸ்வரம் சென்று வருகின்றனர். ரூ.535 கோடியில் புதிய ரயில் பாலம்
2021 மார்ச் 1 புதிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2021 நவ.28ல் பூமி பூஜை செய்யப்பட்டு 2022 ஜன.,ல் ரூ.535 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி துவங்கியது. புதிய பாலத்தில் 1500 மீ.,க்கு 100 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள 500 மீ.,ல் பணிகள் வேகமடைந்துள்ளன.இப்பகுதியில் பொருத்துவதற்காக 700 டன்னில் புதிய துாக்கு பாலம் வடிவமைத்துள்ளனர். அதனை நகர்த்தி சென்று பாலத்தின் நடுவில் பொருத்த உள்ளனர். இதற்கு 30 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் கூறினர். ஆசியாவில் முதல் லிப்ட் துாக்கு பாலம்
லிப்ட் முறையிலான இந்த புதிய துாக்கு பாலம் ஆசியாவில் இயக்கப்படும் முதல் லிப்ட் வடிவ துாக்கு பாலம். ஸ்பெயின் நாட்டு தொழில்நுட்பத்தில் இந்திய பொறியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 72.5 மீ., பாலம் திறந்து மூடும் கடல் மட்டத்தில் இருந்து 22 மீ., உயரத்திற்கு மேலே சென்று திறந்து மூடும். இந்த துாக்கு பாலத்தில் இயக்க 650 கே.வி., திறன் கொண்ட இரு ஜெனரேட்டர்களை பாலத்தின் நடுவில் பொருத்த உள்ளனர். 50 ஆண்டுகளுக்கு மேல் துருப்பிடிக்காத ரசாயன கலவை பெயின்ட் பூசப்பட உள்ளது. பிரதமர் மோடி திறக்கிறார்
துாக்கு பாலம் பணி முடிந்தபின் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன் திறப்பு விழா நடத்த அதிகாரிகள் முனைப்புடன் உள்ளனர்.பிப்.24ல் பாம்பன் பழைய ரயில் பாலம் 110 வது வயதை கடக்கிறது. ராமேஸ்வரம் தீவின் நினைவுச் சின்னம் என வர்ணிக்கும் வகையில் உள்ள இந்த பாலத்திற்கு விரைவில் பிரியாவிடை கொடுக்கப்பட உள்ளது.
பிப்.24ல் பிறந்த நாள்