| ADDED : நவ 24, 2025 06:26 AM
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் பகுதியில் பெய்த மழையால், நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியதை தொடர்ந்து உர மிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற சில பகுதிகளில் மட்டுமே கண்மாய்களில் தேங்கியிருந்த தண்ணீரை பாய்ச்சி விவசாயிகள் நெல்பயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பெரும்பாலான வயல்களில் களை பறித்தல், களைக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளுடன் உரமிடும் பணியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப் பட்டனர். நேற்று உப்பூர், ஊரணங்குடி, சித்துார்வாடி, நாகனேந்தல், புறகரை, கலங்காப்புளி, வெட்டுக்குளம், கோவிலேந்தல், அழியாதான் மொழி, பேரவயல், கண்ணாரேந்தல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழையால், நெல் வயல்களில் தண்ணீர் தேங்கின. அதைத்தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் நெல் பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக உரமிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் வட்டாரத்திற்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாதது குறிப்பிடத்தக்கது