| ADDED : டிச 03, 2025 03:40 AM
ராமேஸ்வரம்: 17 நாட்களுக்குப்பிறகு இன்று (டிச., 3) ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன்வளத் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். நவ.,14ல் வங்கக்கடலில் வீசிய சூறாவளி, கடல் கொந்தளிப்பால் அன்று முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத்துறையினர் தடை விதித்தனர். இதன்பின் காற்றின் வேகம் தணிந்ததும் நவ., 22ல் மீன்பிடிக்கச் சென்று மறுநாள் கரை திரும்பிய மீனவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியாக டிட்வா புயல் உருவானது. இதையடுத்து மீண்டும் நவ., 24 முதல் மீனவர்களுக்கு மீன்வளத்துறை தடை விதித்தது. இந்நிலையில் டிட்வா புயல் சென்னை அருகே வலுவிழந்து வரும் நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் கடல் சீற்றம் இன்றி இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் நேற்று பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீனவளத்துறையினர் அனுமதி அளித்தனர். 17 நாட்களுக்கு பின் மீன் பிடிக்க செல்வதால் அதிக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.