ராமேஸ்வரம் ரதவீதியில் கழிவுநீரால் துர்நாற்றம்: ரூ.52 கோடி வீணாகிறது
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் அருவருப்பு அடைந்தனர். ராமேஸ்வரத்தில் கோயில் அக்னி தீர்த்த கடலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க 2021ல் ரூ.52 கோடியில் ராமேஸ்வரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் அமைத்து இரு மாதங்களுக்கு முன்பு செயல்பட துவங்கியது. இத்திட்டம் செயல்படுவதற்கு முன்பே பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியது. இந்நிலையில் நேற்று கோயில் மேற்கு கோபுர வாசலில் உள்ள ரதவீதியில் பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் மேலரதவீதி முழுவதும் துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள், வியாபாரிகள் அருவருப்பு அடைந்தனர். இதன் மூலம் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பாதாள சாக்கடைக்கு முறையான திட்டமிடல் இன்றி தரமற்ற பணிகளால் தொடர்ந்து கழிவுநீர் வெளியேறி புனித நகரை சாக்கடை நகராக மாற்றி உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.