| ADDED : ஜன 12, 2024 12:14 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.ராமேஸ்வரம் நகராட்சியில் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள திருக்கோயில், தனுஷ்கோடி கடற்கரையை காண தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.இந்நிலையில் ஜன.8ல் ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நகராட்சி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் ஓடியது.இதனை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் பள்ளம் தோண்டி கடந்த 3 நாட்களாக உடைந்த குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.அடிக்கடி உடையும் குழாய்: தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வர்த்தகன் தெரு, திட்டக்குடியில் அடுத்தடுத்து கடந்த 4 மாதங்களாக குடிநீர் குழாய் உடைவதும், நகராட்சி ஊழியர்கள் சரிசெய்வதும், இதனால் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கி அவதிப்படுவதும் வாடிக்கையாகி உள்ளது.எனவே மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க உடையும் குழாயை தரமாக பதிக்கவும், பழுது நீக்கவும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.