| ADDED : டிச 28, 2025 05:20 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பு கடியால் பாதிக்கப்படுவோர் அதிகரிக்கும் நிலையில் 2025ல் ஓராண்டில் 686 பேர் பாம்புகடியால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் போதிய அளவில் விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் புதர்மண்டி காணப்படுவதால் பாம்பு, தேள் போன்ற விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மனிதர்களை பாம்புகள் தாக்குகின்றன. பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதிகள், வெப்ப மண்டலப் பகுதிகளில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால் விவசாயிகள், தோட்டங்களில் பணிபுரிவோரை பாம்புகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தினமும் 2 முதல் 5 பேர் பாம்பு கடிக்காக சிகிச்சை பெறுகின்றனர். சிலர் பாம்பு கடித்தது தெரியாமலும், முதலுதவி எடுக்காமலும் இருப்பதால் இறப்பு வரை செல்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025 ம் ஆண்டில் மட்டும் தீயணைப்புத் துறையினர் 450 பாம்புகளை பிடித்து வனப் பகுதியில் விட்டுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிடித்தது. அதே போல் 2025 ல் மட்டும் 379 ஆண்கள், 307 பெண்கள் என 686 பேர் பாம்பு கடிக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் பெரும்பாலானோர் பாம்பு கடித்த ஒரு சில நிமிடங்களில் சிகிச்சை பெற்றதால் எவ்வித பாதிப்பும் இன்றி குணமடைந்தனர். *முன்னெச்சரிக்கை அவசியம்: இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், பாம்பு விஷமானது பல நுாறு புரதங்களால் ஆனது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மனித உடலில் தாக்கத்தை உண்டாக்கும். பாம்பு மனிதர்களை கடித்தவுடன் இரண்டு வகையான பாதிப்பை ஏற்படுத்தும். ஒன்று, ரத்த ஓட்டத்தை தாக்கி கடும் விளைவுகளை ஏற்படுத்தும் அல்லது நரம்பு மண்டலத்தை முடக்கும். இரண்டாவது இறப்பு வரை கொண்டு செல்லும். குறிப்பாக ரத்தத்தில் பாம்பின் விஷம் கலந்த சில நிமிடங்களில் ரத்தத்தை கட்டியாகச் செய்து ரத்தக் குழாய்களில் துளைகளை ஏற்படுத்தி அதன் மூலம் ரத்தக்கசிவை ஏற்படுத்தி மரணம் ஏற்படுத்தலாம். விஷ முறிவு மருந்து என்பது பாம்பின் நஞ்சில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. பாம்பின் நஞ்சை நீர்த்துப்போகச் செய்து விலங்குகளுக்கு செலுத்தப்படும். பின் அதன் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பிரித்தெடுத்து விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும். பாம்பு கடித்தால், விஷம் பரவாமல் தடுக்க முடிந்தவரை அமைதியாக இருக்க வேண்டும். கடிபட்ட பகுதியை அசைக்காமல் வைத்திருக்க வேண்டும். காயத்தை வெட்டவோ, உறிஞ்சவோ கூடாது. உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பாம்புக்கடி சிகிச்சைக்கான வசதிகள் உள்ளன. --