மண்டபம் மல்லிகை வரத்து குறைவு: கிலோ ரூ.900
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் உற்பத்தி குறைந்ததால் மண்டபம் பகுதி மல்லிகை விலை உயர்ந்து அதிகபட்சமாக கிலோ ரூ.900க்கு விற்பனையானது. ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் நாற்றுகள் பயிரிட்டு மல்லிகை சாகுபடி நடக்கிறது. மண்டபம் மல்லிகை பூ வாசனை மிகுதியாக இருப்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மண்டபம் பகுதியில் மல்லிகை உற்பத்தி குறைந்துள்ளதால் கிலோ மல்லிகை ரூ.900 வரை விற்பனையானது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மண்டபம் அருகே தங்கச்சிமடம், அக்காமடத்தில் மல்லிகை நாற்று உற்பத்தி செய்து பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆகஸ்ட்டில் பூக்கள் வரத்து அதிகமாக இருந்ததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியிருந்தது. பறிப்பு கூலியை விட குறைவான விலைக்கு விற்பனையானது. தற்போது பருவநிலை மாற்றம், நோய் தாக்குதலால் மண்டபம் சுற்றுவட்டார பகுதியில் மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.600க்கு விற்ற மல்லிகை பூ ரூ.900க்கு விற்றது. அதுபோல் முல்லை ரூ.500க்கும், பிச்சி ரூ.600க்கும் விற்பனையானது. மதுரை, புதுக்கோட்டை பகுதியில் இருந்தும் வழக்கமாக வருவதை விட குறைவான பூக்கள் வந்ததால் சாதாரண நாட்களிலும் பூக்களின் விலை அதிகரித்துள்ளது, என்றனர்.