| ADDED : மார் 06, 2024 12:54 AM
ராமநாதபுரம்:''தமிழகத்தில் தான் குறைந்த கட்டணத்தில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன''என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார்.அரசு போக்குவரத்துக்கழகத்தின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு தமிழகத்தில்முதன் முதலாக ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் சார்பில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையத்தினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். ராமேஸ்வரத்தில்பக்தர்கள் குறைந்த கட்டணத்தில் அனைத்து பகுதிகளையும் கண்டு களிக்கும் விதமாக சுற்று வட்டபுதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைத்தார். அமைச்சர் பேசியதாவது: தமிகத்தில் தான் மக்களுக்கு சேவை அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ராஜஸ்தானை சேர்ந்த பயணி தமிழக பஸ் டிக்கெட் 24 ரூபாய் கட்டணத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இதே துாரம் எங்களது மாநிலத்தில் பயணிக்க 45 ரூபாய் வரைகட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் குக்கிராமங்கள் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் சமச்சீரான வளர்ச்சியை பெற்றுள்ளது. 20 ஆயிரம் பஸ்கள், 1.25 லட்சம் தொழிலாளர்களுடன் அரசு போக்குவரத்துக்கழகம் சேவை அடிப்படையில் மக்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியின் போது அரசு போக்குவரத்துக்கழகம் சீர் குலைக்கப்பட்டிருந்தது. தற்போது தி.மு.க., அரசு அதனை சரி செய்து வருகிறது. 7200 புதிய பஸ்கள் வாங்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் தி.மு.க., ஆட்சியில் தான் பேசி முடிக்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., க்கள் ராமநாதபுரம் காதர்பாட்ஷா, பரமக்குடி முருகேசன், அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் மகேந்திரகுமார், பொது மேலாளர் சிங்கார வேலன், நகராட்சித்தலைவர் கார்மேகம் உட்பட பலர் பங்கேற்றனர்.