| ADDED : ஜன 07, 2024 04:17 AM
பரமக்குடி: -அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் மருந்து வணிகர்கள் மற்றும் அனைத்து வணிகர்களையும் சமூக விரோதிகளிடமிருந்து காத்திடும் வகையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், செயலாளர் நாகரத்தினம், பொருளாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் மனு அளித்தனர்.அதில், வணிகர்கள் பெரும்பாலும் நாள் முழுவதும் வணிகம் செய்து அரசுக்கு உரிய வரிகளை செலுத்தி நலத்திட்டங்களுக்கும் உதவுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் சமீப காலமாக ரவுடிகளின் செயல்பாடுகள் அதிகரித்து வணிகர்களிடம் மாமூல் பெறுவது, உணவு சாப்பிட்டு பணம் கொடுக்காமல் செல்வது, மருந்து கடைகளில் சிகிச்சை செய்ய கட்டாயப்படுத்துவது மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவிப்பவர்களை பழி வாங்குவது என தொடர்கிறது.வண்டலுார், ஓட்டேரி மெடிக்கல் உரிமையாளர் வினோத்குமார் ரவுடி கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் வணிகர்களை பாதுகாக்க அவசர சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடர்ந்து நேற்று அனைத்து மருந்து கடைகளிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து விற்பனையில் ஈடுபட்டனர்.