| ADDED : ஜன 30, 2024 12:23 AM
முதுகுளத்துார், -முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்ற புதிய பஸ் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் தி.மு.க. கட்சி நிர்வாகிகளின் கார்கள், பஸ் ஸ்டாண்டிற்குள் கண்டபடி நிறுத்தியதால் அரசு பஸ்கள் வெளியே திருப்பி விடப்பட்டதால் பயணிகள் சிரமப்பட்டனர்.நேற்று முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம் துவக்க விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். புதிய பஸ்ஸை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் பங்கேற்றார்.பின்பு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். அப்போது நிர்வாகிகளின் கார்கள் ஏராளமாக பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்தப்பட்டது. இதனால் உள்ளே, வெளியேயும் அரசு, தனியார் பஸ் செல்ல முடியாமல் பஸ் ஸ்டாண்ட் முன்பே திருப்பி விடப்பட்டது. 15 நிமிடத்திற்கு மேல் பஸ் ஏதும் உள்ளே வராததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.பஸ்கள் வெளியே திருப்ப முடியாமலும் டிரைவர்கள் அவதிப்பட்டனர். மேலும் புதிய பஸ்ஸில் எங்கு செல்லும் எனத்தெரியாமல் பயணிகளும் தவித்தனர்.அரை மணி நேரத்திற்கு மேலாக பஸ் இயக்கப்படாமல் இருந்தது. போக்குவரத்து துறை அதிகாரிகள் முழுமையாக விவரித்த பின் பஸ் புறப்பட்டு சென்றது.