உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதிய ரேஷன் கார்டுகளுக்கு 7 மாதமாக காத்திருக்கும் மக்கள்

புதிய ரேஷன் கார்டுகளுக்கு 7 மாதமாக காத்திருக்கும் மக்கள்

திருவாடானை : மகளிர் உதவித் தொகை வழங்கும் பணிக்காக புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி கடந்த ஏழு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டதால் ராமநாதபுரம்மாவட்டத்தில் பல ஆயிரம் விண்ணப்பங்கள் தேக்கமடைந்துள்ளன.ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு இலவச அரிசி மற்றும் சலுகை விலையில் சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகிறது. தவிர அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களுக்கும் ரேஷன் கார்டு தேவைப்படுகிறது.இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஜூலை மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியை சிவில் சப்ளைத் துறை நிறுத்தியது.முகவரி மாற்றம், பிழை திருத்தம் போன்றவைகளுக்கு மட்டும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது.ஏழு மாதங்களாகியும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியை இன்னும் துவங்கவில்லை. புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் அலுவலகங்களுக்கு அலைகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஆயிரம் விண்ணப்ப மனுக்கள் தேக்கமடைந்துள்ளன. திருவாடானை தாலுகாவில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.அவர்கள் கூறியதாவது:ஏற்கனவே பெற்றோர் கார்டுகளில் இருந்து நீக்கம் செய்த பிறகே புதிய கார்டுக்கு விண்ணப்பித்தோம். தற்போது பெயர்களை நீக்கிவிட்டதால் எங்களது பெயர்கள் எதிலும் இல்லாதநிலை உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கு காப்பீட்டு திட்டம் கைகொடுக்கிறது.இதற்கு ரேஷன் கார்டு தேவைப்படுகிறது. மேலும் அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியை உடனடியாக துவங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்