| ADDED : ஜன 06, 2024 05:36 AM
கடலாடி; கடலாடி ஒன்றியத்தில் அரசு தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அரசு சார்பில் பிசியோதெரபிஸ்டுகள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.மாற்றுத்திறனுடைய பள்ளி மாணவர்கள் தங்களுடைய உடல் அசைவு மற்றும் கை, கால், முகம் உள்ளிட்ட இயற்கை பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு உடல் அசைவு பயிற்சி முறைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை முறையாக செய்வதால் சிரமமான உடல் இறுக்கங்கள் குறைந்து மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கப்படுகிறது.உடலாலும், மன அழுத்தத்தாலும் பாதிப்பை சந்திக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பிசியோதெரபிஸ்ட் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வந்து அவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கின்றனர். இந்நிலையில் கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் பிசியோதெரபி அளிக்கும் பயிற்சியாளர் கடந்த ஐந்து மாதங்களாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் கூறுகையில், பிசியோதெரபிஸ்ட் மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது இன்றியமையாதது. இதனால் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் நிலவும் பனிப்பொழிவால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பிசியோதெரபிஸ்ட்களை நியமிக்க வேண்டும் என்றனர்.