| ADDED : செப் 11, 2011 11:04 PM
ராமநாதரபுரம் : பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த மூவர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாய் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பங்கேற்க தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான் பாண்டியனுக்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி பரமக்குடி வர தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட ஜான் பாண்டியன் வல்லநாட்டில் கைது செய்யப்பட்டார். இதையறிந்து அவரது ஆதரவாளர்கள் பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். கலைந்து செல்ல கூறிய போலீசார் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல், பரமக்குடி டி.எஸ்.பி., கணேசன், மற்றும் இன்ஸ்பெக்டர் அதிசய ராஜ் உட்பட போலீசார் பலர் காயமடைந்தனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. தற்காப்பிற்காக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவர் பலியாகினர். அவர்களது குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாயை முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.