| ADDED : செப் 07, 2011 10:53 PM
முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் சம்பள பிரச்னையால் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 12 நாட்களாக தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டு, 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தவிக்கின்றனர்.நரிப்பையூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் 20 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சம்பளத்தில் 30 சதம் உயர்த்தி கோரியதில், 10 சதம் மட்டுமே அதிகரித்து தரமுடியும் என திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து கடந்த 12 நாள்களாக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், கடலாடி உட்பட 100க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த மக்கள் உப்பு நீரையும், சுகாதாரமற்ற நீரையும் பயன்படுத்தி வருகின்றனர்.சில ஊழியர்கள் கூறியதாவது: செப்., 30ம் தேதியோடு 'டோஷிபா' நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிகிறது. இதனால் சம்பளத்தை உயர்த்தவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ யாரும் முன்வரவில்லை. கோரிக்கையை ஏற்கும் வரை ஸ்டிரைக் தொடரும், என்றனர்.குடிநீர் திட்ட உதவி நிர்வாக பொறியாளர் கணேசன் கூறியதாவது: குடிநீர் திட்டத்தின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், சம்பளத்தை உயர்த்தி வழங்க தாமதம் ஏற்பட்டது. நிறுவன நிர்வாக இயக்குனர் இன்று (நேற்று) சென்னை சென்றுவிட்டார். இவர் ஊர் திரும்பிய பின் பேச்சுவார்த்தை நடத்தப்படும். வழக்கம்போல் இத்திட்டம் செயல்பட துவங்கும், என்றார்.