| ADDED : ஆக 14, 2011 10:45 PM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற படகுகளை நடுக்கடலில் வழிமறித்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை எச்சரித்து விரட்டியடித்தனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் ஏராளமான படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. அன்று மாலை 3 மணியளவில் வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதிக்குள் மீனவர்கள் செல்ல முயன்றபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகுகளை வழிமறித்து நிறுத்தினர். பின் படகில் பிடித்து வைத்திருந்த மீன்களை கடலில் கொட்டி, ஐஸ் பெட்டிகளை சேதப்படுத்தி, 'இலங்கை கடல் பகுதிக்குள் நுழையக்கூடாது' என எச்சரித்து விரட்டியடித்துள்ளனர். இதுபோல் 30க்கும் மேற்பட்ட படகுகளில் பொருட்களை சேதப்படுத்தி படகுகளை இலங்கை கடல் பகுதிக்குள் நுழைய விடாமல் இலங்கை கடற்படையினர் தடுத்ததால் இரவு முழுவதும் வேறு பகுதிக்கு சென்று மீன்பிடித்து நேற்று காலை கரை திரும்பினர்.
மீனவர் முனியசாமி கூறியதாவது: நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல்கள் நிற்கும் பகுதிக்கு செல்லாமல் தூரத்திலேயே மீன்பிடித்து திரும்புவோம். ஒரு சில நேரத்தில் விரட்டினாலும் பெரிதாக பிரச்னை எதுவும் இல்லாததால் தொடர்ந்து மீன்பிடித்து வந்தோம். இம்முறை இலங்கை கடற்படையினர் படகில் இருந்த மீன்களை பறித்து கடலில் வீசினர். மீன்பிடி வலையை வெட்டி கடலில் வீசி, ஐஸ்பெட்டிகளையும் சேதப்படுத்தினர், என்றார்.