| ADDED : ஜன 11, 2024 04:32 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை ஊராட்சியில் அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.150 கோடியில் கடல் உணவுப்பூங்கா அமைத்து 4000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டு 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தற்போது அத்திட்டத்தை கைவிட்டு சிப்காட் தொழிற்பேட்டையாக மாற்றியும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் ஏழு ஆண்டுகளாக வெறும் சீமைக்கருவேலம் காடாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தில் மிக நீண்ட 271 கி.மீ., கடற்கரையை கொண்டது. விவசாயத்திற்கு அடுத்து பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.ஆனால் மீன்களை பதப்படுத்தவும், சுத்தம் செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் ராமநாதபுரத்தில் இல்லை. துாத்துக்குடி கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தனியார் தொழிற்சாலைகளில் பதப்படுத்தி ஏற்றுமதி செய்கின்றனர். இதை கருத்தில் கொண்டு ராமநாதபுரத்தில் 2016ல் அ.தி.மு.க., ஆட்சியில் சிட்கோ சார்பில் கடல் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தனர். அதன்படி சக்கரக்கோட்டை ஊராட்சி கிழக்குக்கடற்கரை சாலையில் கடல் உணவு பூங்கா அமைக்க 100 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது. முதற்கட்ட மாக 50 ஏக்கரில் பூர்வாங்கப் பணிகள் துவங்கியது. அங்கு ரூ.150 கோடிக்கு தொழில் முதலீடு பெறப்பட்டு 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என 2020ல் அப்போதைய முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். தொழில் மனை வளாகங்கள், மீன்பிடி தொழில் தொடர்பான கட்டமைப்புகள், தண்ணீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டடங்கள் கட்டப்பட்டது.இப்பகுதியில் போதுமான தண்ணீர், அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் எதிர்பார்த்த அளவிற்கு வலை தயாரித்தல், மீன்பிடி, பதப்படுத்தல் நிறுவனங்கள் தொழில் துவங்க முன்வரவில்லை. இதனால் கடல் பூங்கா திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பொது தொழிற்பேட்டையாக இந்த இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டமைப்புகளையும் முழுமையாக செயல்படுத்தாமல் சிட்கோ, சிப்காட் நிறுவனங்களின் அறிவிப்பு பலகை மட்டுமே உள்ளது. 100 ஏக்கர் நிலம் வெறும் சீமைக்கருவேலம் காடாக மாறி வருகிறது.அ.தி.மு.க., அறிவித்த திட்டம் என்பதால் தி.மு.க., ஆட்சியில் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.1000 கோடியில் கெமிக்கல் தொழிற்சாலை அமைக்க ராமநாதபுரம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இங்கு அறிவித்த தொழில் திட்டங்களே செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே மத்திய அரசின் முன்னேற விளையும் மாவட்டமான ராமநாதபுரத்தில் கடல் உணவு சார்ந்த தொழிற்சாலைகள் முதலில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.----