| ADDED : பிப் 01, 2024 07:12 AM
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் அறுவடைப் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால் நெல் கொள்முதல் விலையை உயர்த்த விவசாயிகள் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் நெல் அறுவடைப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இயந்திரம் மூலம் இப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அறுவடை செய்யபட்ட நெல் மூடைகளை விவசாயிகள் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு இத்தாலுகாவில் சிறுகம்பையூர், வெள்ளையபுரம், மங்களக்குடி, சிறுமலைக்கோட்டை, அஞ்சுகோட்டை, திருவாடானை, என்.எம்.மங்கலம் ஆகிய ஏழு ஊர்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. சன்ன ரகம் கிலோ ரூ.23.10க்கும், பொது ரகம் ரூ.22. 65க்கும் அரசால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தனியார் வியாபாரிகள் கூடுதலாக கிலோவிற்கு ரூ.30 வரை கொடுத்து கொள்முதல் செய்வதால் விவசாயிகள் வியாபாரிகளை நோக்கி செல்வது அதிகரித்துள்ளது. விவசாயிகள் கூறியதாவது:தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி நெல் கொள்முதல் விலையை உடனே உயர்த்த வேண்டும். உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதால் நெல் கொள்முதல் விலையை உயர்த்துவது காலத்தின் கட்டாயம். ஆகவே அறுவடை முடிவதற்குள் நெல் கொள்முதல் விலையை உயர்த்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.