சித்த மருத்துவ பிரிவில் விஷ வண்டு கடி மருந்து இல்லை
திருவாடானை : திருவாடானை சித்த மருத்துவ பிரிவில் விஷ வண்டு கடிக்கு மாத்திரை இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாடானை அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவு செயல்படுகிறது. இப்பகுதியில் உள்ள ஏழை மக்கள், நாள் பட்ட நோய்கள், சர்க்கரை நோய், மூட்டுவலி, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற சித்த மருத்துவ பிரிவை நாடுகின்றனர். மேலும் சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி உள்ளிட்டவைகளுக்கும் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். கொரோனா காலத்தில் நில வேம்பு கஷாயம், கபசுர குடிநீர் போன்றவை சித்த மருத்துவப் பிரிவில் வழங்கப்பட்டதால் தற்போது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் விஷ வண்டு கடிக்கு மாத்திரை இல்லை. இது குறித்து கல்லுார் பாரதிநகர் மக்கள் கூறியதாவது: கடந்த சில நாட்களாக அடிக்கடி மழை பெய்து வருவதால் விஷவண்டுகள் வீடுகளில் புகுந்து கடிக்கிறது. சித்த மருத்துவ பிரிவில் சிகிச்சைக்கு சென்றால் மாத்திரை இல்லை என கூறுகின்றனர். அதே போல் ரத்த அழுத்தத்திற்கும் மாத்திரை இல்லாததால் சிரமமாக உள்ளது என்றனர். இது குறித்து சித்த மருத்துவ பணியாளர்கள் கூறுகையில், விஷ வண்டுகள் கடிக்கு என தனியாக மாத்திரை இல்லை. உடலில் ஏற்படும் அரிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு மாத்திரை உள்ளது. ரத்த அழுத்தம் மாத்திரை விரைவில் வந்துவிடும் என்றனர்.