| ADDED : ஜன 27, 2024 04:52 AM
தொண்டி : தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே இல்லாததால் நோயாளிகள் அவதிப்படும் நிலை தொடர்கிறது.தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள கடற்கரை ஓரங்களில் 20க்கும் மேற்பட்ட மீன் கம்பெனிகள் உள்ளன. அங்கு வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து தினமும் 300க்கும் மேற்பட்டவர்கள் சென்று புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இங்கு குழந்தைகள் நலம், பிரசவ வார்டு, பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்படுகிறது. இருந்த போதும் எக்ஸ்ரே மிஷின் இல்லை. இது குறித்து காங்., மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்றால் வெளியில் தனியாரிடம் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அலைச்சல் ஏற்படுவதுடன், அதிக தொகை கட்டணமாக செலவழிக்கும் நிலை உள்ளது. எனவே ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு எக்ஸ்ரே கருவி அமைக்கவும், இந்த மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.