இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.1 கோடி தந்தங்கள் பறிமுதல் மூன்று பேர் கைது
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை அருகே இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டனர். மன்னார் வளைகுடா கடற்கரையோரப் பகுதிகளில் சமீப காலமாக இலங்கைக்கு சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தப்படுவதும், பறிமுதல் செய்வதும் தொடர்கிறது. நேற்று காலை 6:00 மணிக்கு கீழக்கரை கிழக்கு புதுநகர் பகுதியில் மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி தலைமையில் எஸ்.ஐ., அய்யனார், நுண்ணறிவு போலீசார் மதியழகன், தணிகைவேலன், சுரேந்தர் சிங் ஆகியோர் ரோந்து சென்று வந்தனர். சந்தேகத்திற்கிடமாக மாதா சர்ச் அருகே கையில் பையுடன் நின்றிருந்த மூன்று வாலிபர்களை பிடித்தனர். விசாரணையில் துாத்துக்குடி மாவட்டம் மேலுார் பாண்டுரங்கன் தெருவை சேர்ந்த காதர் பாட்ஷா 27, சாயல்குடி அருப்புக்கோட்டை ரோடை சேர்ந்த ஹரிக்குமார் 29, காவாகுளத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் 26, என தெரிந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது 3 கிலோ 900 கிராம் எடையுள்ள 2 தந்தங்கள் இருந்தன. மூவரும் இதனை இலங்கைக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி. கேரள வனப்பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது.மூவரையும் கைது செய்த மரைன் போலீசார் இலங்கைக்கு கடத்துவதற்கு யாருக்காக கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விசாரித்தனர். தந்தங்கள் ராமநாதபுரம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.