| ADDED : மார் 18, 2024 06:35 AM
ஆர்.எஸ்.மங்கலம் : திருப்பாலைக்குடி மீன் மார்க்கெட் அருகே கொட்டப்பட்டு வரும் ஊராட்சிக் கழிவு மற்றும் இறைச்சி கழிவுகளால் வியாபாரிகள், மக்கள் துர்நாற்றத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மீனவ கிராமமான திருப்பாலைக்குடியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மீனவர்கள் பயனடையும் வகையில், கடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை நேரடியாக விற்பனை செய்யும் வகையில், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் சில ஆண்டுகளுக்கு முன்பு மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டது. இந்நிலையில், மீன் மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் ஊராட்சி பகுதியில் தேங்கும் குப்பை கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கடந்த சில மாதங்களாக கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வியாபாரிகள், மக்கள் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, குப்பையை அகற்றி சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.