| ADDED : மே 16, 2024 06:34 AM
ராமேஸ்வரம் : கடலில் மீன்பிடிக்கச் செல்ல இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில், எதிர்பார்த்த மீன்வரத்து இன்றி போதுமான வருவாய் இல்லாததால் ராமேஸ்வரத்தில் விசைப்படகுகள் மராமத்து பணிகள் மந்தமாக நடக்கிறது. மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஏப்., 15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது. இதனால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் 1500 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு, மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்நாட்களில் விசைப்படகுகளில் சேதமடைந்த மரப்பலகைகள் மற்றும் பழுதான இஞ்சின்களை சரி செய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபடுவார்கள்.ஆனால் நேற்றுடன் தடை முடிந்து 30 நாள்கள் ஆகியும் ராமேஸ்வரம் பகுதியில் படகுகளில் பழுது நீக்கும் பணியில் மீனவர்கள் கவனம் செலுத்தாமல், மராமத்து பணி மந்தமாக உள்ளது. இதுகுறித்து ராமேஸ்வரம் படகு உரிமையாளர் சகாயம் கூறுகையில் :இலங்கை கடற்படை கெடுபிடியால் எதிர்பார்த்த மீன்வரத்து இன்றி தொழில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் போதுமான வருவாய் இல்லாததால் படகுகளை மராமத்து செய்ய முடியவில்லை. மீன்பிடிக்க செல்ல இன்னும் 30 நாள்கள் உள்ளதால் வியாபாரிகளிடம் கடன் வாங்கி படகுகளை புதுப்பிக்க வேண்டும் என்றார்.