உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பங்குனி உத்திரம்: வித வித அலங்காரங்களில் ஜொலித்த முருகன்

பங்குனி உத்திரம்: வித வித அலங்காரங்களில் ஜொலித்த முருகன்

பங்குனி உத்திரம்: வித வித அலங்காரங்களில் ஜொலித்த முருகன்சேலம் :பங்குனியில் பவுர்ணமியுடன் உத்திரம் நட்சத்திரம் சேர்ந்து வருவதால், பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி, சேலம், அம்மாபேட்டை, குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில் நேற்று காலை, உற்சவ மூர்த்தியான முருகன், வள்ளி தெய்வானைக்கு, பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் செய்து ராஜ அலங்காரத்தில் முருகன் காட்சி அளித்தார்.தொடர்ந்து அம்மாபேட்டை வையாபுரி தெரு, பழைய பிள்ளையார் கோவில் தெரு, அருணகிரி தெரு, ஆச்சி முத்து முதலி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள், குழந்தை பாக்கியம், திருமண தடை நீங்குதல் உள்ளிட்ட, பல்வேறு வேண்டுதல்களை வைத்து காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். முக்கிய வீதிகள் வழியே சென்று, அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்ரமணியர் கோவிலை அடைந்தது. பின் பாலால், முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிேஷகம் செய்தனர். தொடர்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது.அதேபோல் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழநியாண்டவர் கோவிலில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிேஷகம் செய்து தங்க கவச சாத்துபடி வைபவம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, முருகன், வள்ளி தெய்வானை சமேதராய் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தியை தேரில் எழுந்தருளச்செய்து தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதேபோல், அடிவாரம் ஆறுபடை முருகன், கந்தாஸ்ரமம், பேர்லண்ட்ஸ் முருகன் உள்பட மாநகரின் பல்வேறு முருகன் கோவில்களில் பங்குனி உத்திரம் கோலாகலமாக நடந்தது.ஆத்துார் வெள்ளப்பிள்ளையார் கோவிலில் சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். அக்கோவில் வளாகத்தில் உள்ள அறுபடை பாலமுருகன் தங்க கவசத்தில் ஜொலித்தார். ஏத்தாப்பூர் முத்துமலை முருகன், தங்க கவசம், வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஆத்துார் கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில் சுப்ரமணியசுவாமி புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார்.ஆறகளூர் காமநாதீஸ்வரர், தென்பொன்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனுார் கங்காசவுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், வீரகனுார் குமரன் மலை முருகன், தம்மம்பட்டி திருமண்கரடு பாலதண்டாயுதபாணி, நத்தக்கரை, கெங்கவல்லி முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. வீதி உலாஓமலுார் வாரச்சந்தை அருகே காசி விஸ்வநாதர் ஆலயத்தில் செந்திலாண்டவர் சுவாமி, ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை திருக்கல்யாணம் நடந்தது. ஓமலுார் கடைவீதியில் உள்ள சுப்ரமணியர் கோவிலில், திரளான பக்தர்கள் காவடி எடுத்து வீதி உலா சென்றனர். ஓமலுார் அக்ரஹாரம் வைத்தீஸ்வரன் கோவிலில் முருகன் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். தாரமங்கலம் சுப்ரமணியர் கோவிலில் சுவாமிக்கு பூக்கள், சந்தனத்தால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. தாரமங்கலம் வேலாயுதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.மேட்டூர் நகராட்சி ஞானதண்டாயுதபாணி கோவிலில் பூஜை நடந்தது. மேட்டூர், 16 கண் மதகு அருகே சின்னபழனி பாலமுருகன் கோவிலுக்கு, காவிரியாற்றில் இருந்து காவடி எடுத்து பக்தர்கள் வந்தனர். தங்கமாபுரிபட்டணம் தங்கமலை முருகன் கோவிலில் சிறப்பு அலங்காரம், அபிேஷகம், பூஜை நடந்தது.பால் அபிேஷகம்ஏற்காடு முருகன் நகரில், மலை உச்சியில் உள்ள பாலமுருகன் கோவிலுக்கு, பக்தர்கள், அலங்கார ஏரியில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். பலர் காவடி எடுத்து அலகு குத்தி வேண்டுதல்களை நிறைவேற்றினர். ஊர்வலத்தில் முருகன் வேடம் அணிந்து வந்த சிறு குழந்தை காலில், வழி நெடுக முருக பக்தர்கள் தண்ணீர் ஊற்றி குளுமைப்படுத்தி வணங்கினர். ஒரு பக்தர், ஆணி செருப்பணிந்து கோவில் வரை நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினார். பஸ் ஸ்டாண்ட் வழியே, பாலமுருகன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின் குடங்களில் இருந்த பாலால் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து முருகனுக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இடைப்பாடி, கவுண்டம்பட்டி முத்துக்குமாரசுவாமி கோவிலில் சுவாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. பின் புஷ்ப ரதத்தில் சுவாமி, வள்ளி தெய்வானை ஊர்வலம் நடந்தது. சூரியமலை அடிவாரம் கந்தசாமி கோவில், சங்ககிரி, அக்கமாபேட்டை சுப்ரமணியர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.காவடி ஆட்டம்இடங்கணசாலை நகராட்சி மேட்டுக்காட்டை சேர்ந்த பக்தர்கள், நேற்று காலை, கஞ்சமலை சித்தர்கோவிலுக்கு சென்று, புனித தீர்த்த கிணற்றில் நீராடி, காவடிகளுக்கு திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து பூக்கள் சூடி வணங்கினர்.சிவாச்சாரியார், காவடிகளுக்கு பூஜை செய்தார். பின் பக்தர்கள், சிறு தேரில் கொண்டு சென்ற முருகன் சிலைக்கு பூஜை செய்யப்பட்டது. காலை, 9:00 மணிக்கு, சித்தர்கோவிலில் இருந்து தேரை பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் இழுத்தபடி, காவடி ஆட்டத்துடன் மேட்டுக்காடு முருகன் கோவிலை அடைந்து வழிபட்டனர்.தேரோட்டம் கோலாகலம்பங்குனி உத்திர தேர் திருவிழாவையொட்டி, ஆத்துார் அருகே வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு சுவாமிக்கு, 200 லிட்டர் பால், 20 லிட்டர் தேன் அபிஷேக பூஜை நடந்தது. அப்போது மூலவர் பாலசுப்ரமணியர், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். பால தண்டாயுதபாணி, தங்க கவசத்தில் ஜொலித்தார். மாலை, 5:00 மணிக்கு, 50 அடி உயர தேரை, விழாக்குழுவினர், பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கோவில் அடிவாரம் சுற்றி வந்த தேர், இரவு, 7:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. சுற்றுவட்டாரபகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை