உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தமிழகத்தில் லேப்-டாப் விற்பனை 60% சரிவு

தமிழகத்தில் லேப்-டாப் விற்பனை 60% சரிவு

அரசின் இலவச லேப்-டாப் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பால், வெளி மார்க்கெட்டில், லேப்-டாப் விற்பனை, 60 சதம் குறைந்துள்ளது.தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் துவங்கியுள்ளது. இலவச அரிசி, தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களை தொடர்ந்து, 25 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் கொள்முதலுக்கு டெண்டர் கோரும் பணி நடந்து வருகிறது.'ஆடு, மாடு, கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் ஆகியவை வழங்கும் பணி செப்டம்பர் 15ம் தேதி துவங்கும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். எப்படியும் கடந்த ஆட்சி போல ரேஷன்கார்டு வைத்துள்ள அனைவருக்கும் இலவசங்கள் வந்து சேருமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் காரணமாக அரசு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ள பொருட்களின் விற்பனை பெரிதும் மந்தமாகியுள்ளது.சராசரியாக மாதம், 60 மிக்ஸி, கிரைண்டர் விற்பனையான கடையில், தற்போது, 12 கூட விற்பனையாவதில்லை என, வியாபாரிகள் புலம்புகின்றனர். இலவசத் திட்டம் விநியோகம் துவங்கி விட்டால், விற்பனை முழுமையாக பாதிக்கப்படுமென அஞ்சுகின்றனர்.இலவச திட்டங்களிலேயே, 'ஹைலைட்'டாக கருதப்படுவது, ப்ளஸ் 1, ப்ளஸ் 2, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் வழங்குவதுதான். இலவச பொருட்களிலேயே விலை உயர்வானதும் இதுதான்.மானிட்டர் நீளத்தை பொருத்து என, இரண்டு வகையான லேப்-டாப்கள் சந்தையில் விற்பனையாகின்றன. தரமான கம்பெனி லேப்-டாப், 30 ஆயிரம் முதல், 45 ஆயிரம் ரூபாய் வரையும், பிற லேப்-டாப், 20 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.வருங்காலத்தில் லேப்-டாப் இல்லாமல் கல்வியில்லை என்ற நிலை உருவாகும் என்பதால், நடுத்தர குடும்பத்தினரே தங்கள் குழந்தைகளுக்கு, மாதாந்திர தவணை முறையில் லேப்-டாப் வாங்கித் தரத் துவங்கினர். இதற்கிடையேதான், இலவச அறிவிப்பு வெளியானது. இரண்டு மாதமாக விற்பனை சரிவடைந்து வருகிறது.ஈரோட்டை சேர்ந்த கம்ப்யூட்டர் விற்பனையாளர்கள் கூறியதாவது:அரசின் இலவச அறிவிப்புக்கு பின், விற்பனை, 60 சதவீதம் குறைந்துள்ளது. விலையும் குறையும் என்றனர்.-நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி