சேலம்: சேலம் மாவட்டத்தில், பேரூராட்சி செயல் அலுவலர்கள் 4 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மண்டலத்தில், 52 செயல் அலுவலர்களில், மூன்று பேர் தவிர மீதமுள்ள, 49 பேர் சொந்த மாவட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலராக இருந்தவர் அத்தியண்ணன். இவர், விதிமுறைக்கு மாறாக, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக தமிழக பேரூராட்சிகள் இயக்குனருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
அதனால், அத்தியண்ணனை, வீரக்கல் புதூர் பேரூராட்சிக்கு இடமாற்றம் செய்து கலெக்டர் மகரபூஷணம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்தியண்ணன், செயல் அலுவலர் சங்க தலைவராக உள்ளார். கருப்பூர் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்தவர் மாதையன், பனமரத்துப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒரே ஆண்டில், நான்காவது முறையாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன், காடையாம்பட்டி, தாரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்தவர், கருப்பூருக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து, பனமரத்துப்பட்டிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பனமரத்துப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலராக இருந்தவர் கணேசன். இவர், பொறுப்பேற்ற இரண்டு மாதத்திலேயே மல்லூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மல்லூர் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்தவர் லாரன்ஸ். இவர், கருப்பூர் பேரூராட்சி செயல் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். அரசு அலுவலர்கள் யாரும் சொந்த மாவட்டத்தில் வேலை செய்யக்கூடாது என்கிற விதிமுறை உள்ளது. சேலம் மாவட்டத்தில், 33 செயல் அலுவலர்கள் உள்ளனர். இவர்களில், மல்லூர் செயல் அலுவலர் கணேசன், கன்னகுறிஞ்சி செயல் அலுவலர் தனபால், கருப்பூர் செயல் அலுவலர் லாரன்ஸ் தவிர, மீதமுள்ள 30 செயல் அலுவலர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதேபோல, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் நடேசன், கண்காணிப்பாளர் செல்வம் ஆகியோர் இதே மாவட்டத்தை சேர்ந்தவர்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 19 செயல் அலுவலர்களும், அதே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.