| ADDED : ஏப் 07, 2024 01:17 AM
சேலம்:கேரள மாநிலம், திருச்சூர் அருகே சேவலுாரை சேர்ந்த நகை வியாபாரி கிக்சன், 47. இவர், நகைக்கடைகள், விற்பனை நிறுவனங்களுக்கு ஆபரணங்களை தயாரித்து வினியோகிக்கிறார். இவரிடம் மார்ச், 10ல் சென்னையை சேர்ந்த பிரபல நகைக்கடை நிறுவனம், 1.50 கோடி ரூபாய் மதிப்பில், 350 சவரன் ஆபரணங்களுக்கு ஆர்டர் கொடுத்தது. அதை தயார் செய்த கிக்சன், கடந்த, 26ல் திருவனந்தபுரம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சூரில் இருந்து சென்னைக்கு பயணித்தார். ரயில் சேலம் ஜங்ஷன் வந்தபோது நகைகள் வைத்திருந்த பை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கிக்சன் சேலம் ரயில்வே போலீசில் அளித்த புகாரில், டி.எஸ்.பி., பெரியசாமி வழக்குப்பதிவு செய்தார். இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய, எஸ்.பி., அன்பு, மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர், ஈரோடு, சேலம் ஸ்டேஷன்களில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். இந்த கொள்ளையில் வடமாநில கும்பல், திருச்சி ராம்ஜி நகர், ஆந்திராவின் குப்பத்தை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தனிப்படையினர் விசாரிக்கின்றனர்.