1.12 லட்சம் மகளிர் குழுக்களுக்கு 4,578 கோடி கடனுதவி வழங்கல்
சேலம் : சேலம், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை பகுதிகளில் மகளிர் திட்டம் மூலம் கடனுதவிகள் பெற்று சுய தொழில் மேற்கொண்டு வரும் தொழில் முனைவோரை, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று சந்தித்தார்.தொடர்ந்து அவர் கூறியதாவது: மாவட்டத்தை பொறுத்தவரை, 21,329 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களின் சுய தொழில் மூலம் வருமானம் ஈட்டும்படி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் உரிய பயிற்சிகள், வங்கி கடன் உதவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்துதரப்படுகின்றன. மாவட்டத்தில், 4 ஆண்டுகளில் மகளிர் திட்டம் மூலம், 1,12,130 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, சுழற்சி முறையில், 4,578.41 கோடி ரூபாய் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் முன்னேற்ற திட்டங்களை அறிந்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.