ஓமலுார்:முன்விரோதம் காரணமாக, இரு கிராம இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே தும்பிப்பாடி ஊராட்சியில், குதிரைகுத்தி பள்ளத்தில் பள்ளர் காலனி உள்ளது. இங்கு, ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இதேபோல், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் பள்ளர் காலனி உள்ளது. இங்கு நடந்த அம்மன் விழாவிற்கு, குதிரைகுத்தி பள்ளத்தை சேர்ந்த இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது ஒரு இளைஞர் முறைத்து பார்த்ததாக கூறி, இரு கிராம இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், குதிரைகுத்தி பள்ளத்தை சேர்ந்த இருவரை, கஞ்சநாயக்கன்பட்டி இளைஞர்கள் தாக்கியுள்ளனர். நேற்று காலை, குதிரைகுத்தி பள்ளம் அருகே வந்த கஞ்சநாயக்கன்பட்டி காலனியை சேர்ந்த, இரு இளைஞர்களை, அப்பகுதி இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதையடுத்து, கஞ்சநாயக்கன்பட்டி காலனியை சேர்ந்த, 30-க்கும் மேற்பட்டோர் பைக்குகளில் குதிரைகுத்திபள்ளம் காலனிக்கு சென்று, அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர். சிலர் காயமடைந்தனர், வீடுகளுக்கு முன் இருந்த மண்பானை உள்ளிட்ட சில பொருட்களை உடைத்து நொறுக்கினர். இதை பார்த்த பொதுமக்கள் வீட்டினுள் புகுந்து, கதவை பூட்டி விட்டு தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் தலைமையிலான போலீசார் வருவதற்குள், பைக்கில் வந்த கும்பல் தப்பி சென்றது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் தீவட்டிப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த சிலர், ஓமலுார் அரசு மருத்துவனையில் சிகிச்சையில் உள்ளனர்.மோதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக, இரு கிராம இளைஞர்கள் சிலரை, போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.4 பேர் கைது; 13 பேர் மீது வழக்கு
கோவில்
திருவிழா தகராறு தொடர்பாக, தும்பிப்பாடியை சேர்ந்த ரஞ்சித்குமார், 34,
கொடுத்த புகார்படி, ஈரோடு திண்டல் பகுதியை சேர்ந்த சந்தோஷ், கோகுல்,
சாரதி, அரவிந்தன் ஆகிய நான்கு பேரை கைது செய்து, ஏழு பேர் மீது வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த
சாமியப்பன், 32, அளித்த புகார்படி, ஆறு பேர் மீது தீவட்டிப்பட்டி
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.