| ADDED : ஜூன் 04, 2024 03:54 AM
சேலம்: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழா மற்றும் 101வது பிறந்தநாள் விழா, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் கன்னங்குறிச்சி பஸ் ஸ்டாப் அருகே, மாவட்ட செயலர் ராஜேந்திரன், கருணாநிதி படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 200க்கும் அதிகமான பெண்களுக்கு சேலை, விவசாயிகளுக்கு மா,பலா, தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.அதன்பின், சேலம் புதுபஸ் ஸ்டாண்ட் அருகே மாவட்ட கட்சி அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து, ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவு, இறந்த தி.மு.க., தொண்டரின் குடும்பத்துக்கு, 1.5 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில், சேலம் நீதிமன்ற நுழைவு வாயிலில் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தியபின், அங்கு வந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.எம்.பி., பார்த்திபன், 4 ரோட்டில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார். அழகாபுரத்தில், மத்திய மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் முரளி தலைமையில், கருணாநிதி படம் அலங்கரிக்கப்பட்டு, பிறந்தநாள் விழா நடந்தது.