மேட்டூர்,:கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதில் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் மொத்த நீர் இருப்பு முறையே, 19.5 மற்றும் 49.5 டி.எம்.சி.,நேற்று முன்தினம் வினாடிக்கு, 11,000 கனஅடியாக இருந்த கபினி நீர்வரத்து, நேற்று, 11,269 கனஅடியாகவும், 8,000 கனஅடியாக இருந்த கே.ஆர்.எஸ்., நீர்வரத்து, நேற்று, 8,787 கனஅடியாகவும் உயர்ந்தது.இதற்கேற்ப நேற்று முன்தினம், 58 அடியாக இருந்த கபினி நீர்மட்டம் நேற்று, 60 அடியாகவும், 15.36 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 16.50 டி.எம்.சி.,யாகவும் அதிகரித்தது. கபினி நிரம்ப இன்னும், 3 டி.எம்.சி.,யும், கே.ஆர்.எஸ்., நிரம்ப, 28 டி.எம்.சி., நீரும் தேவை. கபினி அணை மேற்கு தொடர்ச்சி அடிவாரம் உள்ள நிலையில் நீர்பரப்பு பகுதியில் மழை தீவிரம் அடைந்துஉள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி முதல்கட்டமாக நேற்று கபினியில் இருந்து வினாடிக்கு, 3,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நீர், 241 கி.மீ.,ல் உள்ள மேட்டூர் அணைக்கு, மூன்று நாட்களில் வந்து சேரும்.அதற்கேற்ப வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிக்கும். நேற்று முன்தினம் வினாடிக்கு, 876 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 818 கனஅடியாக சரிந்தது.அணையில் இருந்து குடிநீருக்கு, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் நேற்று முன்தினம், 39.70 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 39.65 அடியாக சரிந்தது.