ஆத்துார்:சேலம் மாவட்டம் கெங்கவல்லி, நடுவலுார் ஊராட்சி தலைவர், தி.மு.க.,வைச் சேர்ந்த மூக்கன், 55. இவர் நேற்று காலை, 10:00 மணிக்கு ஊராட்சி அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு வந்த, பள்ளக்காட்டைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர், '3 மாதங்களாக ஆழ்துளை குழாய் கிணறு சரி செய்யப்படவில்லை. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை' என முறையிட்டனர். பஞ்., தலைவர், 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.'எப்போது பார்த்தாலும் இதே பதிலையே தெரிவிக்கிறீர்கள்' எனக் கூறிய மக்கள், அலுவலகத்தில் இருந்த மூக்கனை வெளியே வர வைத்து, 10:30 மணிக்கு, தாங்கள் எடுத்து வந்த பூட்டால், ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். அங்கு வந்த கெங்கவல்லி பி.டி.ஓ., தாமரைச்செல்வி விசாரித்தார். 'குடிநீர் விரைந்து வழங்கப்படும். எங்களிடம் புகார் தெரிவிக்காத நிலையில், ஊராட்சி அலுவலகத்தை பூட்டியது தவறு' என்றார். இதனால் மதியம், 12:40 மணிக்கு பூட்டை திறந்து விட்டனர்.இருப்பினும் பூட்டு போட்டவர்கள், தொடர்ந்து தலைவர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்தபடியே இருந்தனர். போலீசார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வெளியேறினர். செயலர் மலர்விழி, கெங்கவல்லி போலீசில் புகார் அளித்தார்.கலெக்டர் பிருந்தாதேவி கூறுகையில், ''ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டது குறித்து, சட்ட நடவடிக்கை எடுக்க, ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.