சேலம்: விருதுநகரில் நடந்த மாநில நீச்சல் போட்டியில், சேலம் மாணவ, மாணவியர், பல்வேறு பதக்கங்கள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.தமிழ்நாடு அண்டர்வாட்டர் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில், 4வது மாநில அளவிலான நீச்சல்போட்டி, விருதுநகரில் கடந்த, 22 ல் நடந்தது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.சேலம் பொன்னம்மாபேட்டை ஓயாசிஸ் நீச்சல் குளத்தில் செயல்படும் பால்கன் அகாடமியில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர், பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று, 24 தங்கம், 17 வெள்ளி, 11 வெண்கல பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.இதில், பவித்ரா, சரண், ஹர்ஷினி ஆகியோர் தலா நான்கு தங்க பதக்கம், அட்சயா இரண்டு தங்கம், பத்மசரண், ஆதவ், கவிஷ், வருணிகா ஆகியோர் தலா ஒரு தங்கம் உள்ளிட்ட, 37 மாணவ, மாணவியர் பதக்கங்கள் வென்றனர்.பதக்கங்களோடு சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய மாணவ, மாணவியருக்கு, பயிற்சியாளர் முகமது தப்ரஷ்கான், உரிமையாளர் பரிவாதினி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.