பனமரத்துப்பட்டி:'ரிசர்வ் பாரஸ்ட்' ஆக மாறிய பனமரத்துப்பட்டி ஏரி, மேட்டூர் அணை உபரிநீரால் புத்துயிர் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சேலத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஜருகுமலை அடிவாரத்தில், 2,137 ஏக்கரில் பனமரத்துப்பட்டி ஏரியை, 1911ல் உருவாக்கினர். அங்கிருந்து சேலம் மாநகர், ராசிபுரம் நகராட்சி, பனமரத்துப்பட்டி, மல்லுார் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கினர். சேலத்துக்கு மேட்டூரில் இருந்து காவிரி குடிநீர் வந்த பின், பனமரத்துப்பட்டி ஏரி குடிநீர் திட்டம் கைவிடப்பட்டது.ஆனால், மாநகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, 25 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியது. 2004ல் நீதிமன்ற உத்தரவுப்படி ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிய பின், 2005ல் ஏரி நிரம்பியது. பின் போதிய மழையின்றி, 18 ஆண்டுகளாக ஏரி வறண்டு சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, 'ரிசர்வ் பாரஸ்ட்' ஆக மாறியுள்ளது.சேலம் எம்.பி.,க்கள், பனமரத்துப்பட்டி, வீரபாண்டி எம்.எல்.ஏ.,க்கள், ஏரியில் காவிரி உபரி நீரை நிரப்பி, சுற்றுலா தலமாக மாற்றப்படும் என, தேர்தல் நேரங்களில் அளித்த வாக்குறுதிகள் கானல் நீராகப் போய்விடுகின்றன.ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து பல லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு கடலில் கலக்கிறது. இதனால் உபரிநீரை, பனமரத்துப்பட்டி ஏரி, அதன் துணை ஏரிகளுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து கூறுகையில், ''ஏரியை துார்வாரி, காவிரி உபரிநீரை நிரப்பி சுற்றுலா தலமாக்க சட்டசபையில் பேசியுள்ளேன். சேலம் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை,'' என்றார்.பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கே.பாலச்சந்திரன், 65, கூறுகையில், ''2005ல், அ.தி.மு.க., ஆட்சியில் ஏரியை சுற்றுலா தலமாக்கும் சாத்திய கூறு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையை, மாநகராட்சி நிர்வாகம் இதுவரை செயல்படுத்தவில்லை. தலைவாசல் கால்நடை பூங்காவுக்கு குரால்நத்தம் வழியே காவிரி குடிநீர் செல்கிறது. அதன் மூலம் ஏரிக்கு மேட்டூர் அணை உபரிநீரை கொண்டு வரலாம்,'' என்றார்.காமராஜர் உழவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, 63, கூறுகையில், ''மாநகராட்சி நிர்வாகம், சீமைக்கருவேல மரங்களை ஒட்டுமொத்தமாக அகற்றாமல் ஒவ்வொரு முறை ஏலம் விட்டு வருமானம் ஈட்டுகிறது. அந்த மரங்களை வேரோடு பிடுங்க வேண்டும். 1 மீட்டர் ஆழத்துக்கு வண்டல் மண் எடுத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பின் காவிரி நீரை ஏரியில் நிரப்ப வேண்டும்,'' என்றார்.பனமரத்துப்பட்டி ரோட்டரி சமுதாய குழும தலைவர் கே.எம்.பிரபாகரன், 41, கூறுகையில், ''சேலம் மக்களுக்கு குடிநீர் வழங்கிய ஏரி புதர்மண்டியுள்ளது வேதனை. காவிரி உபரி நீரை நிரப்பி, படகு சவாரி, பறவைகள் சரணாலயம், பூங்கா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுற்றுலா தலமாக மாற்றலாம்,'' என்றார்.பா.ஜ.,வின், மாவட்ட விவசாய பிரிவு துணைத்தலைவர் எம்.வெங்கடேஷ் பாபு, 45, கூறுகையில், ''கிடமலை, போதமலை, ஜல்லுாத்துப்பட்டி மலை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏரிக்கு மழை நீர் செல்கிறது. அந்த நீர் வழி தடங்களில் உள்ள அடைப்புகளை துார்வாரி சீரமைக்க வேண்டும். ஏரியில் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றினால் தண்ணீரை தேக்கி வைக்கலாம்,'' என்றார்.பள்ளிதெருப்பட்டி விவசாயி கே.பி.சீனிவாசன், 80, கூறுகையில், ''ஏரியில் தண்ணீர் தேங்கினால், சுற்றுப்பகுதி விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும். ஏரி வறண்டதால் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு காவிரி நீரை கொண்டு வந்தால், 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் செழிக்கும்,'' என்றார்.மல்லுார், வடகாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் வி.கே.பழனிவேலு, 55, கூறுகையில், ''வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை, பனமரத்துப்பட்டி ஏரிக்கு கொண்டு வர வேண்டும். அங்கிருந்து ஆறு வழியே அம்மாபாளையம், மல்லுார், மூக்குத்திபாளையம், வாழக்குட்டப்பட்டி, சந்தியூர், ஏர்வாடி உள்ளிட்ட இடங்களில், 10க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லலாம். இதனால் ஒரு லட்சம் விவசாய குடும்பத்தினர் பயன்பெறுவர்,'' என்றார்.